என்னைப் பற்றி

எனது படம்
சாதாரணமானவன் தான் ஆனால் ஏதாவது சாதிக்க வேண்டும் என்று மனதில் எப்போதும் நினைப்பவன்.

வெள்ளி, 16 மே, 2014

VGK 18 - ஏமாற்றாதே ! .... ஏமாறாதே .... !!


இது ’சிறுகதை விமர்சனப்போட்டி’க்கான கதை

விமர்சனங்கள் வந்து சேர வேண்டிய 

கடைசி நாள்: 22.05.2014 
வியாழக்கிழமை

இந்திய நேரம் இரவு எட்டு மணி வரை மட்டும்.

விமர்சனம் அனுப்ப வேண்டிய 
மின்னஞ்சல் முகவரி: 
valambal@gmail.com 

REFERENCE NUMBER:  VGK 18

போட்டி பற்றிய மற்ற விபரங்களுக்கான இணைப்பு:



 ஏமாற்றாதே ! ... ஏமாறாதே ! 

சிறுகதை

By வை. கோபாலகிருஷ்ணன்

-oOo-




காலை நேரம். தன் தள்ளாத வயதில், அந்தக்கிழவி தேங்காய் வியாபாரம் செய்ய, அந்தத் தெருவோரமாக, சாக்குப்பையை விரித்து, காய்களை சைஸ் வாரியாக அடுக்கி முடித்தாள்.  

வெயில் ஏறும் முன்பு காய்களை விற்றுவிட்டால் தேவலாம். வெயில் ஏற ஏற உடம்பில் ஒருவித படபடப்பு ஏற்பட்டு, படுத்துத்தூங்க வேண்டிய நிர்பந்தம் ஏற்படுகிறது.

அந்த அரசமர பிள்ளையார் கோயில் அருகிலுள்ள பொதுக்குழாயில் குடிநீர் அருந்திவிட்டு, சற்றுநேரம் அந்தமரத்தடி மேடை நிழலிலேயே தலையை சாய்த்து விட்டு, பொழுது சாய்ந்ததும் வெயில்தாழ வீட்டுக்குச் சென்று விடுவது அவள் வழக்கம்.

இளம் வயதில் ஒண்டியாகவே நூற்று ஐம்பது காய்கள் வரை உள்ள பெரிய மூட்டையை, தலையில் சும்மாடு வைத்து சுமந்து வந்தவள் தான். இன்று வெறும் ஐம்பது காய்களைக்கூட தூக்க முடியாதபடி உடம்பு பலகீனமாகப் போய் விட்டது.

ஒரு காய் விற்றால் ஐம்பது காசு முதல் ஒன்றரை ரூபாய் வரை இலாபம் கிடைக்கும். பேரம் பேசுபவர்களின் சாமர்த்தியத்தைப்பொறுத்து லாபம் கூடும் அல்லது குறையும். ஏதோ வயசான காலத்தில் தன்னால் முடிந்தவரை உழைத்து குடும்பத்திற்கு தன்னால் ஆன பண உதவி செய்யலாமே என்று நினைப்பவள்.

வரவர கண் பார்வையும் மங்கி வருகிறது. கணக்கு வழக்கும் புரிபடாமல் குழப்பம் ஏற்படுகிறது. அழுக்கு நோட்டு, கிழிந்த நோட்டு, செல்லாத நோட்டு, எண்ணெயில் ஊறி பிசுக்கு ஏறிய நோட்டு பிரச்சனைகள் மட்டுமின்றி, இந்த ஒரு ரூபாய் இரண்டு ரூபாய் நாணயங்கள் இரண்டுமே ஒரே மாதிரியாக இருந்து தொலைப்பதிலும் அந்தக் கிழவிக்கு மிகப்பெரிய தொல்லையாக உள்ளது.

“சாமீ .... வாங்க ... தேங்காய் வாங்கிட்டுப்போங்க” குரல் கொடுத்தாள்.

“தேங்காய் என்ன விலைம்மா?” வந்தவர் கேட்டார்.

“வாங்க சாமீ .... எடுத்துட்டுப்போங்க .... எவ்வளவு காய் வேணும்?”  

“முதலிலே காய் என்ன விலைன்னு சொல்லும்மா, நீ சொல்லும் விலையை வைத்துத்தான், நான் உங்கிட்ட தேங்காய் வாங்கலாமா வேண்டாமான்னு முடிவே செய்யணும்” என்றார்.



“பெரிய காய் ஏழு ரூபாய் சாமீ; சின்னக்காய் ஆறு ரூபாய்” என்றாள் கிழவி.

“விலையைச் சொல்லிக்கொடுத்தால் ஒரு பத்து பன்னிரெண்டு காய் எடுத்துக்கொள்வேன்” என்றார்.

“பன்னிரெண்டு காயாவே எடுத்துக்கோ சாமீ; மொத்தப் பணத்திலே ஒரு ரெண்டு ரூபாய் குறைச்சுக்கொடு சாமீ” என்றாள்.

“பெரியகாய் பன்னிரெண்டுக்கு எழுபது ரூபாய் வாங்கிக்கோ” என்றார்.

“கட்டுப்படியாகாது சாமீ ..... ஒரு காய் விற்றால் நாலணா [25 பைசா] தான் கிடைக்கும்” என்றாள். 

அவளுடன் ஏதேதோ பேசிக்கொண்டே ஒவ்வொரு தேங்காய்களையும் தன் காதருகே வைத்து ஆட்டிப்பார்த்தும், கட்டை விரலையும் ஆள்காட்டிவிரலையும் சேர்த்து வைத்து ஒவ்வொரு காய்களின் மீது தன் ஆள்காட்டி விரல் நகத்தினால் மிருதங்கம் வாசித்தும், பன்னிரெண்டுக்கு பதிமூன்றாகத் தன் பையில் போட்டுக்கொண்டு, நூறு ரூபாய்த் தாள் ஒன்றை நீட்டியபடி, “மீதிப்பணம் கொடு” என்றார் அவசரமாக.

“ஆறே முக்கால் [Rs. 6.75 P] ரூபாய்ன்னா பன்னிரெண்டு காய்களுக்கு எவ்வளவு சாமீ ஆச்சு?” கிழவி கேட்டாள்.

“எண்பத்தோரு [ Rs. 81 ] ரூபாய் ஆகுது. அவ்வளவெல்லாம் தர முடியாது. முடிவா ஆறரை ரூபாய்ன்னு போட்டுக்கோ. பன்னிரெண்டு காய்க்கு எழுபத்தெட்டு ரூபாய் எடுத்துண்டு, மீதி இருபத்திரண்டு ரூபாயைக்கொடு, நாழியாச்சு” என்றார். 

அவளும் சற்று நேரம் மனக்கணக்குப்போட்டு குழம்பி விட்டு, அவரிடம் இருபத்திரெண்டு ரூபாயைக் கொடுத்து விட்டு, ”கணக்கு சரியாப்போச்சா, சாமீ?” என்று ஒரு சந்தேகமும் கேட்டு விட்டு, அவர் கொடுத்த நூறு ரூபாய்த் தாளைப் பிரித்துப்பார்த்து விட்டு, மீதித்தேங்காய்களின் மேல், அந்த ரூபாய் நோட்டை ஒரு சுற்று சுற்றிவிட்டு, கண்ணில் ஒத்திக்கொண்டு, ”முதல் வியாபாரம் சாமீ” என்று சொல்லி விட்டு, தன் சுருக்குப்பையில் பணத்தைப்போட்டு இடுப்பில் சொருகிக்கொண்டாள்.

இது போன்ற டிப்டாப் ஆசாமிகளில் சிலர் மிகவும் அல்பமாக இருப்பார்கள். வண்டியில் பெட்ரோலை நிரப்பிக்கொண்டு பெரிய செருப்புக்கடைக்குப் போவார்கள். காலுக்குப் புத்தம் புதிய ஷூ வாங்குவார்கள். அதில் போட்டுள்ள விலையான ரூபாய் 2199.95 P வுடன் ஐந்து பைசா சேர்த்து இரண்டாயிரத்து இருநூறு ரூபாயாகக் கொடுத்து விட்டு, திருடனுக்குத் தேள் கொட்டியது போல, ஓசைப்படாமல் வருவார்கள். அங்கு பேரம் பேச மாட்டார்கள். பேசினாலும் ஒரு ரூபாய் கூட குறைத்து வாங்க முடியாது என்பது இவர்களுக்கு நன்றாகவே தெரியும்.

அது போலவே பெரிய ஜவுளிக்கடைகள், நகைக்கடைகள் போன்றவற்றில் அவர்கள் சொல்லுவது தான் விலை. யாரும் பேரம் பேசுவது கிடையாது. தப்பித்தவறி பேரம் பேசுபவர்களை ஒரு மாதிரியாக பட்டிக்காட்டான் என்பது போலப் பார்த்து பரிகாசம் செய்வார்கள்.

தெருவோரம் காய்கறி வியாபாரம் செய்யும், அதுவும் ஒருசில வயதானவர்களிடம் தான், பேரம் பேசுவார்கள், விலையைக் குறைப்பார்கள், அசந்தால் ஏதாவது ஒன்றை காசு கொடுக்காமல் கடத்தியும் வந்து விடுவார்கள். அதில் ஒரு அல்ப ஆசை இவர்களுக்கு.  

கீரை வகைகள், காய்கறிகள், கருவேப்பிலை, கொத்துமல்லி, இஞ்சி, பச்சைமிளகாய், எலுமிச்சம்பழம் முதலியன விற்கும் தெருவோர ஏழை மற்றும் வயதான வியாபாரிகளிடம் தான் இவர்கள் பாச்சா பலிக்கும்.

அவர்களும் கூட இப்போதெல்லாம் தங்களுக்குள் சங்கம் அமைத்துக்கொண்டு ’ஒரே விலை - கறார் விலை’ என்று சொல்லி மிகவும் உஷாராகி வருகின்றார்கள். 

மூன்று அல்லது நான்கு பேர்கள் உள்ள சிறிய குடும்பத்திற்கே காய்கறி வாங்க தினமும் 60 முதல் 100 ரூபாய் வரை தேவைப்படுகிறது. குழம்புத்தானுக்கு ஐந்து அல்லது ஆறு முருங்கைக்காய் வாங்கினாலே, அதற்கு மட்டுமே 25 அல்லது 30 ரூபாய் தேவைப்படுகிறது. என்ன செய்வது? எல்லாப்பொருட்களின் விலைகளுமே அடிக்கடி ஏறித்தான் வருகிறது.  

சொல்லப்போனால் இந்த காய்கறிகள் மட்டுமே, ஷேர் மார்க்கெட் போலவே,  சில சமயங்களில் ஏறினாலும் பலசமயங்களில் கிடுகிடுவென்று இறங்கி விடுவதும் உண்டு. விளைச்சல் அதிகமானால், வேறு வழியில்லாமல் அவற்றின் விலைகள் போட்டாபோட்டியில் குறைக்கப்படுவது உண்டு. விற்பனையாகாமல் தேங்கிவிட்டால் அழுகி வீணாகி விடும் அபாயமும் உண்டு.  மற்ற பொருட்கள் அப்படியில்லை; ஏறினால் ஏறினது தான். இறங்கவே இறங்காது. பதுக்கப்படுவதும் உண்டு.

பார்க்க மனதிற்கு நிறைவாகவும், காய்கறிகள் பச்சைப்பசேல் என்று ஃப்ரெஷ் ஆகவும் இருந்து, சரியான எடையும் போட்டுக் கொடுக்கும் வியாபாரிகளிடம், அவர்கள் சொல்லும் விலை ஓரளவு நியாயமாக இருப்பின், அநாவஸ்யமாக பேரம் பேசுவதில் அர்த்தமே இல்லை. 

ஒரு ரூபாய் ரெண்டு ரூபாய் முன்னபின்ன சொன்னால் தான் என்ன; நாமும் கொடுத்தால் தான் என்ன; குறைஞ்சாப்போய் விடுவோம்? பிறர் வயிற்றில் அடிக்காமல் நியாயமான விலை கொடுத்து வாங்கி வந்தால் அதன் ருசியே தனியாக இருக்குமே! பேரம் பேசி விலையைக் குறைக்காமல், அவர் கேட்ட பணத்தை அப்படியே கொடுத்த நமக்கு காய்கறிகளை, மனதார வாழ்த்தியல்லவா கொடுத்திருப்பார் .... அந்த வியாபாரியும். 

இன்று இந்தக்கிழவியிடம் தேங்காய் வாங்கியவர் ஒரு வேண்டுதலை நிறைவேற்றத்தான், அதுவும் கடவுளுக்காகவே தேங்காய்கள் வாங்கியுள்ளார்.  அந்த மலை உச்சியில் உள்ள உச்சிப்பிள்ளையாருக்கு ஒன்றும், மலையடிவாரத்தில் உள்ள கீழ்ப்பிள்ளையாருக்கு ஒன்றும், மலையைச்சுற்றியுள்ள நான்கு வீதிகளிலும் உள்ள மற்ற பத்து பிள்ளையார்களுக்கு ஒவ்வொன்றும் என மொத்தம் 12 சதிர் தேங்காய்கள் அடிப்பதாக வேண்டுதல் செய்து கொண்டுள்ளார்.   

சதிர் தேங்காய் உடைக்கும் அவருடன் ஏழைச்சிறுவர்கள் ஒரு கும்பலாகப் போய், உடைபட்டுச் சிதறும் சதிர் தேங்காய்களை பொறுக்குவதில் தங்களுக்குள் முண்டியடித்து வந்தனர்.

கிழவியிடம் வாங்கிய அனைத்துக் காய்களும் மிகவும் அருமையாகவும், பளீரென்று வெளுப்பாகவும், நல்ல முற்றிய காய்களாகவும், தூள்தூளாக உடைந்து சிதறியதில் அவருக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது.


 

அவரின் நெடுநாள் பிரார்த்தனை இன்று தான் ஒருவழியாக நிறைவேறியுள்ளது. இந்தப்பிள்ளையார்களுக்கு சதிர் தேங்காய் உடைப்பதாக வேண்டிக்கொண்டு விளையாட்டு போல 15 வருஷங்கள் ஆகிவிட்டன. திருச்சியிலுள்ள அந்த மிகப்பெரிய பொதுத்துறை நிறுவனத்தில் வேலை வாய்ப்பு கிடைக்க வேண்டும் என்பதற்காக இண்டர்வ்யூவுக்கு வந்த போது வேண்டிக்கொண்டது.  

பிறகு அவருக்கு வேலை கிடைத்தும் அவசரமாக போபாலில் போய் வேலைக்குச் சேர வேண்டும் என்று உத்தரவு வந்ததால், வேண்டிக்கொண்ட பிரார்த்தனையை உடனே நிறைவேற்ற முடியாமல் போய் விட்டது.

இப்போது அவர் மீண்டும் திருச்சிக்கே பணி மாற்றத்தில் வந்தாகி விட்டது. இனியும் பிள்ளையாருக்கான பிரார்த்தனையை தாமதிக்கக்கூடாது என்று, இன்று பிரார்த்தனையை நிறைவேற்றக் கிளம்பி விட்டார். 

’பதினைந்து வருஷங்கள் முன்பே இந்தப் பிரார்த்தனையை நிறைவேற்றி இருக்கலாம். அப்போது தேங்காய் விலையும் மிகவும் மலிவு. பன்னிரெண்டு காய்களையும் சேர்த்து பன்னிரெண்டு ரூபாய்க்கோ அல்லது பதினெட்டு ரூபாய்க்கோ வாங்கி இருக்கலாம்;

இன்று சுளையாக எழுபத்தெட்டு ரூபாய்களை செலவழிக்க நேரிட்டு விட்டது. அநியாயமாக இப்படி ஒரு தேங்காயையே ஆறரை ரூபாய் கொடுத்து வாங்க வேண்டியுள்ளது; 

தான் புத்திசாலித்தனமாக அந்தக்கிழவியிடம் சுட்டு வந்த ஒரு காய் மட்டும் தான் லாபம். அதையும் சேர்த்துக் சராசரியாகக் கணக்குப் பார்த்தாலும், ஒரு காய் ஒன்று [78/13 = 6]ஆறு ரூபாய் வீதம் அடக்கம் ஆகிறது என்று, கடவுளுக்கு வேண்டிக்கொண்டதற்கு பலவிதமான லாப நஷ்டக் கணக்குகள் பார்த்து, 12 காய்களையும் சதிர் காய்களாக அடித்து விட்டு, மீதியிருந்த ஒரே ஒரு தேங்காயுடன் வீட்டை அடைந்து, அதைத் தன் மனைவியிடம் கொடுத்தார்.

அதிகாலையிலேயே குளித்துவிட்டுப் புறப்பட்டுப் போனவர்; பசியோடு வருவாரே என்று அவசர அவசரமாக சமையலை முடித்து விட்ட அவரின் அன்பு மனைவி, தேங்காயை உடைத்துத் துருவிப் போட்டு விட்டால், சூடாக சாப்பாடு பரிமாறி விடலாம் என்று தேங்காயை நன்றாக அலம்பி விட்டு, நாரையும் உரித்து விட்டு, அரிவாளால் லேஸாக ஒரு போடு போட்டாள்.

தேங்காயின் இளநீரை கீழே சிந்தாமல் சிதறாமல் ஒரு சிறிய பாத்திரத்தில் பொறுமையாகப் பிடித்து, வெயிலில் அலைந்து திரிந்து விட்டு வந்துள்ள தன் கணவருக்குக் குடிக்கக் கொடுத்து விட்டு, சமையல் அறைக்கு வந்து தேங்காயை அரிவாளால் மீண்டும் ஒரு போடு ஓங்கிப் போட்டாள்.

”என்னங்க இது; இந்தத்தேங்காய் அழுகலாக உள்ளதே! பார்த்து வாங்கியிருக்கக்கூடாது! ஸ்வாமிக்கு உடைத்ததெல்லாமாவது நன்றாக இருந்ததா?” என்று கேட்டவாறே அந்த அழுகின தேங்காயைத் தன் கணவனிடம் காண்பித்தாள்.

இதற்கிடையில் ஆசையுடன் வாயில் தான் ஊற்றிக்கொண்ட அழுகிய இளநீரை துப்பவும் முடியாமல், விழுங்கவும் முடியாமல் அவதிப்பட்ட அந்த ஆளு, ஒருவழியாக வாஷ்பேசின் வரை ஓடிச்சென்று துப்பிவிட்டு வாய் அலம்பிக்கொண்டு வந்தார்.

மனைவி கையில் வைத்திருந்த அந்த அழுகல் தேங்காய் மூடிகளை உற்று நோக்கினார். அதில் அந்த ஏழைக் கிழவியின் தளர்வான முகம் அவருக்குக் காட்சியளித்தது.


  

அனைத்துப் பிள்ளையார்களும் தன்னைப்பார்த்து ஏளனமாகச் சிரிப்பது போலவும் அவருக்குத் தோன்றியது. தான் செய்த தவறுக்கு சரியான தண்டனை கைமேல் கிடைத்து விட்டதாக உணர்ந்தார்.   


oooooOooooo


oooooOooooo




  
**Expected Schedule for Result Announcements**
[** Subject to slight changes** ]






 For VGK 15   அழைப்பு 

  24th and 25th May, 2014 Saturday / Sunday




 For VGK 16   ஜாதிப்பூ  

  26th and 27th May, 2014 Monday / Tuesday 




 For VGK 17   சூழ்நிலை      

  28th and 29th May, 2014 Wednesday / Thursday



 For VGK 18 ஏமாற்றாதே ! ஏமாறாதே !! 
  
On Saturday 31.05.2014 and Sunday 01.06.2014

 

எல்லோருக்கும் இங்கு தேதி கிழமையுடன் அழைப்பு’ கொடுத்து விட்டேன் !

’ஜாதிப்பூ’ச்சரமாக அழைப்பின் மணம் உங்களிடம் இப்போதே வீசியிருக்கும் !!

போட்டி முடிவுகளை நான் சொல்லியுள்ளபடி வெளியிடும் ‘சூழ்நிலை’ உருவாகட்டும் !!!

இல்லாவிட்டால் ‘ஏமாற்றாதே ! ஏமாறாதே’ என்றல்லவா நீங்க சொல்ல நேரிடும் !!!! 

 

போட்டிக்கான கதைகள் மட்டும் 
வழக்கம்போல 
வெள்ளிக்கிழமை தோறும் 
தொடர்ந்து வெளியிடப்படும். 



தொடர்ந்து அனைவரும் 
அனைத்துப்போட்டிகளிலும் 
கலந்துகொண்டு சிறப்பிக்குமாறு 
அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.  





என்றும் அன்புடன் தங்கள்
கோபு [VGK]




29 கருத்துகள்:

  1. ஏகப்பட்ட பணத்தைக் கடைகளில் கொடுக்கத் தயங்கமாட்டோம்.இந்தக் கிழவியை ஏமாற்றுவதில் இந்த மனிதருக்கு என்ன சந்தோஷமோ. .வெகு அழகாக ஊர் நிலவரத்தைச் சொல்லி இருக்கிறீர்கள். .இனிமேலாவது தர்ந்திருப்பவர்களை ஏமாற்றும் குணம் மறையட்டும். நன்றி வை கோ சார்.

    பதிலளிநீக்கு
  2. எந்த படியால் மற்றவர்களுக்கு அளக்கிறார்களோ -
    அதே படியால்தான் தனக்கும் அளக்கப்படும்
    என்னும் நீதியை உரைத்த கதைக்குப் பாராட்டுக்கள்..!

    பதிலளிநீக்கு
  3. அழுகின காயால்தான் அழுகிய மனமும் சற்றாவது உணர்ந்திருக்கும். நல்ல கதை. அன்புடன்

    பதிலளிநீக்கு
  4. ஆஹா
    தலைப்புக்கு ஏற்றட கதை.
    நட்டு நடப்பு இப்படித்தான் உள்ளது
    ரசித்து படித்தேன்,
    நல்ல கதை
    விஜி

    பதிலளிநீக்கு
  5. நல்ல கதை. முன்பே படித்திருந்தாலும் மீண்டும் படித்தேன்.

    போட்டியில் பங்கு பெறும் அனைவருக்கும் வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
  6. இந்த முடிவைத் தான் எதிர்பார்த்தேன். சரியான முடிவு.

    பதிலளிநீக்கு
  7. பெயரில்லா17 மே, 2014 அன்று PM 4:43

    நல்ல கதை- பணி தொடர வாழ்த்து.
    வேதா. இலங்காதிலகம்.

    பதிலளிநீக்கு
  8. அருமையான கதை்முனபே படித்து இருக்கிறேன்் நல்ல் படிப்பினை தரும் கதை்.

    பதிலளிநீக்கு
  9. நீங்களே வரைந்த படம் மிக பொருத்தமாய் இருக்கிறது.

    பதிலளிநீக்கு
  10. அனைத்து பிள்ளையரும் தப்பு செய்தவரை பார்த்து சிரிப்பது அருமையாக இருக்கிறது. பிள்ளையார் படங்கள் எல்லாம் மிக அழகு.

    பதிலளிநீக்கு
  11. கிழவியிடமிருந்து ஒரு தேங்காயை ஏமாற்றியதால் தேங்காய் இல்லாத சாப்பாடுதான் அவருக்கு கிடைத்தது. கிழவியை எளிதில் ஏமாற்றமுடியும். ஆனால் பிள்ளையரை ஏமாற்ற முடியுமா?.





    //






    ௧௧௧ எமற்றமுடும். பிள்ளையயா ருக்கு .

    பதிலளிநீக்கு
  12. கதை ரொம்ப யதார்த்தமாகவும் நியாயத்தை உணர்த்துவதாகவும் உள்ளது...படிக்கும் நாம் அனைவருமே பாட்டி போலவே உணர்ந்து கெட்ட தேங்காய் என்று தெரிந்ததும் 'நன்னா வேணும் இந்த ஏமாத்துக்காரனுக்கு' என்று என்ன வைக்கிறது...பதினைந்து வருடம் கழித்து பிரார்த்தனை நிறைவேற்றுபவனுக்கு இதுவும் வேண்டும் இன்னமும் வேண்டும்...என்று சொல்லத் தோன்றுகிறது

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. Ananthasayanam T June 5, 2014 at 7:12 AM

      Most Respected & Dear Sir,

      வணக்கம்.

      //கதை ரொம்ப யதார்த்தமாகவும் நியாயத்தை உணர்த்துவதாகவும் உள்ளது...படிக்கும் நாம் அனைவருமே பாட்டி போலவே உணர்ந்து கெட்ட தேங்காய் என்று தெரிந்ததும் 'நன்னா வேணும் இந்த ஏமாத்துக்காரனுக்கு' என்று என்ன வைக்கிறது...பதினைந்து வருடம் கழித்து பிரார்த்தனை நிறைவேற்றுபவனுக்கு இதுவும் வேண்டும் இன்னமும் வேண்டும்...என்று சொல்லத் தோன்றுகிறது//

      ஆஹா ! தங்களிடமிருந்து முதன்முதலாக அதுவும்
      தங்கத்தமிழினில் ஓர் பின்னூட்டம். [கருத்து i.e Comment].

      தன்யனானேன். ! ;))))))

      தங்களின் அசாத்யப் பொறுப்புகள் + நேர நெருக்கடிகளுக்கு இடையே இங்கும் அன்புடன் வருகை தந்து அருமையாக அழகாக அதுவும் தமிழில் கருத்துக்கள் அளித்துள்ளது என்னை அகம் மகிழச்செய்தது. என் மனம் நிறைந்த இனிய அன்பு நன்றிகள்.

      என்றும் பிரியமுள்ள VGK

      நீக்கு
  13. இந்த சிறுகதைக்கான விமர்சனப்போட்டியில் கலந்துகொண்ட திரு. G. பெருமாள் செட்டியார் அவர்கள் [அவர்களின் விமர்சனம் போட்டியின் நடுவர் அவர்களால் பரிசுக்குத்தேர்வாகாமல் இருந்தும்கூட] அவர்கள் எழுதி அனுப்பியிருந்த விமர்சனத்தைத் தனது வலைத்தளத்தினில் தனிப்பதிவாக வெளியிட்டுச் சிறப்பித்துள்ளார்கள்.

    இணைப்பு: http://gperumal74.blogspot.in/2014/05/blog-post_31.html

    அவர்களுக்கு என் மனமார்ந்த இனிய அன்பு நன்றிகள்.

    இது மற்ற அனைவரின் தகவலுக்காக மட்டுமே.

    அன்புடன் VGK

    பதிலளிநீக்கு
  14. 'VGK's சிறுகதை விமர்சனப்போட்டி - 2014'

    இந்த சிறுகதைக்கு திருமதி. தமிழ்முகில் பிரகாசம் அவர்கள் வெகு நாட்களுக்கு முன்பே எழுதி அனுப்பியிருந்த விமர்சனம், இன்று அவர்களால், அவர்களின் பதிவினில் வெளியிடப்பட்டுள்ளது.

    அதற்கான இணைப்பு இதோ:

    http://muhilneel.blogspot.com/2014/10/blog-post_24.html

    இது மற்றவர்களின் தகவலுக்காக மட்டுமே.

    நடைபெற்ற சிறுகதை விமர்சனப் போட்டியில் தன் விமர்சனம் பரிசுக்குத் தேர்வாகாவிட்டாலும்கூட, அதனைத் தன் வலைத்தளத்தினில் தனிப்பதிவாக வெளியிட்டு சிறப்பித்துள்ள திருமதி தமிழ்முகில் பிரகாசம் அவர்களின் பெருந்தன்மைக்கு என் மனமார்ந்த இனிய அன்பு நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

    அன்புடன் கோபு [VGK]

    ooooooooooooooooooooooooooo

    பதிலளிநீக்கு
  15. மனித மனம் அடையும் அற்ப சந்தோஷங்களில் இதுவும் ஒன்று.

    பதிலளிநீக்கு
  16. மின்னஞ்சல் மூலம் எனக்கு இன்று (22.07.2015) கிடைத்துள்ள, ஓர் பின்னூட்டம்:

    -=-=-=-=-=-=-

    ஏழைகள் வயிற்றில் இது போல் தெரிந்தே அடிக்கும் பல கோட் சூட் ஆளுங்களும், பட்டுப்புடவை மாமிகளும் இருக்கிறார்கள். அவர்களுக்கு ஒரு சரியான எழுத்தடி... தங்களது இந்தக் கதை. கதைக்குள் ஒவ்வொரு வரியும், அதற்கேற்றவாறு எத்தனை விஷயங்களை புட்டு புட்டு வைத்திருக்கிறீர்கள்... இந்தக் கதையைப் படித்தபின் இது போன்ற அல்ப சந்தோஷிகள் நிச்சயம் மனம் திருந்துவார்கள். கதாசிரியர் மன எண்ணத்துக்கு ஒரு நல்ல விருந்து.... மற்றவர்களுக்கு...: மருந்து.

    -=-=-=-=-=-=-

    இப்படிக்கு,
    தங்கள் எழுத்துக்களின் பரம ரசிகை.

    பதிலளிநீக்கு
  17. ஏமாற்றாதே ஏமாறாதே தலைப்புக்கு பொருத்தமான கதை தெரிவு.

    பதிலளிநீக்கு
  18. முத்திரைக் கதை (எதுதான் முத்திரைக் கதை இல்ல இந்த கோபு அண்ணா எழுதினதுல).

    பரிசை அள்ளப் போகிறவங்களுக்கு வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. Jayanthi Jaya September 29, 2015 at 3:11 PM

      வாங்கோ ஜெயா, வணக்கம்மா.

      //முத்திரைக் கதை (எதுதான் முத்திரைக் கதை இல்ல இந்த கோபு அண்ணா எழுதினதுல).//

      முத்திரை பதித்த தங்களின் இனிய கருத்துக்களுக்கு மிக்க நன்றி, ஜெ.

      //பரிசை அள்ளப் போகிறவங்களுக்கு வாழ்த்துக்கள்.//

      :)

      நீக்கு
  19. இதுபோல கோட்டு சூட்டு ஆளுக தா பெரிய பெரிய மால் கள்ல பேரமே பேசாம பாக்கெட்டுல போட்ட வெலய கம்முனு கொடுத்துபோடுவாங்க. பாடுபட்டு ரோட்டோர கெளவிகிட்டத்துல பேரம்பேசி அவங்கள ஏமாத்தியும்போடுறாங்க. இன்னா கோராம.

    பதிலளிநீக்கு
  20. முதல் போணி செய்பவரிடம் அவர்தரும் பணத்தை விற்கும் பொருவில் சுற்றுவதைக்கூட கவனத்தில் வைத்து குறிப்பிட்டிருப்பது சிறப்பு. இதுபோல அன்றாட நடைபாதை வியாபாரியை ஏன் இவர்இப்படி ஏமாத்தணும்.

    பதிலளிநீக்கு
  21. ஏமாற்றாதே..ஏமாறாதே...வாத்தியாரின் படப்பாடலைப்போல பாஸிடிவான தலைப்பு. முதலில் வருவது ஏமாற்றாதே...ஏமாந்துபோகாதே/ஜாக்கிரதையாக இருக்கப் பழகு..என பலவித மெஸேஜ்களை வழங்கும் கதை. ஏதோ நாம் கதையின் ஒரு பாத்திரமாக அருகில் நின்று வேடிக்கை பார்ப்பதைபோல ஒரு உணர்வை ஏற்படுத்துவது - கதைசொல்லியின் மாபெரும் திறமை..வாழ்த்துகள். நன்றி.

    பதிலளிநீக்கு
  22. இந்தக் கதையை, படக்கதையாக்கி, தொடக்கக் கல்வி மாணாக்கர்களுக்குப் பாடமாக வைத்தால் நல்ல பலன் கிடைக்கும் என எண்ணத் தோன்றுகிறது.
    இன்றைய உலகில் பலராலும் பலர் ஏமாற்றப்படுவது தொடர் கதையாகி விடுகிறது. மக்கள் விழிப்புணர்வு பெறாத வரை ஏமாற்று வேலைகளும் தொடர்ந்து நடந்து கொண்டுதான் இருக்கும் என்பதையும் எடுத்துரைக்கத் தவறவில்லை.
    கதைக்கான கரு, அதற்கேற்ற பாத்திரப் படைப்புகள், கோவையான நடை, இடையிடையே தவறான செயல்களுக்குத் தீர்வுகள் என அனைத்தும் நிறைந்த தரமான ஒரு சிறுகதையைப் படைத்த ஆசிரியருக்கு என் மனமார்ந்த பாராட்டுகள். நன்றி!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. My Dear Mr. Seshadri Sir,

      வாங்கோ, வணக்கம்.

      கதையைப்பற்றிய தங்களின் சிறப்புப்பார்வையும், விரிவான + ஆதரவான + உற்சாகம் அளித்திடும் கருத்துக்களும் என் மனதுக்கு மிகவும் திருப்தியாக உள்ளன. தங்களுக்கு என் மனமார்ந்த இனிய அன்பு நன்றிகள்.

      அன்புடன் VGK

      நீக்கு
  23. இந்தப் போட்டிக்கான கதையினை முன்பு நான் என் வலைத்தளத்தினில், 2011-இல் என் வலையுலக ஆரம்ப நாட்களில், வெளியிட்டிருந்தபோது அவற்றிலுள்ள பின்னூட்ட எண்ணிக்கைகள்: 52 + 34 = 86


    அதற்கான இணைப்புகள்:

    http://gopu1949.blogspot.in/2011/09/blog-post_22.html

    http://gopu1949.blogspot.in/2011/11/blog-post_09.html

    பதிலளிநீக்கு
  24. மேற்படி என் சிறுகதைக்கான விமர்சனப்போட்டிக்கு, ஏராளமாக வந்து குவிந்திருந்த விமர்சனங்களில், உயர்திரு நடுவர் அவர்களால், பரிசுக்குத் தேர்வான விமர்சனங்களை மட்டும் படிக்க இதோ இணைப்புகள்:

    முதல் பரிசுக்குத் தேர்வானவை:
    http://gopu1949.blogspot.in/2014/06/vgk-18-01-03-first-prize-winners.html

    இரண்டாம் பரிசுக்குத் தேர்வானவை:
    http://gopu1949.blogspot.in/2014/05/vgk-18-02-03-second-prize-winners.html

    மூன்றாம் பரிசுக்குத் தேர்வானது:
    http://gopu1949.blogspot.in/2014/05/vgk-18-03-03-third-prize-winner_31.html

    சிறுகதை விமர்சனப் போட்டிகளின் நிறைவினில், பரிசு பெற்ற ஒட்டுமொத்த வெற்றியாளர்கள் பற்றிய முழு விபரங்கள் அறிய, இதோ ஒருசில சுவாரஸ்யமான இணைப்புகள்:

    http://gopu1949.blogspot.in/2014/11/vgk-31-to-vgk-40.html

    http://gopu1949.blogspot.in/2014/11/vgk-01-to-vgk-40-total-list-of-hat.html

    http://gopu1949.blogspot.in/2014/11/blog-post_6.html

    http://gopu1949.blogspot.in/2014/11/blog-post_7.html

    பதிலளிநீக்கு
  25. WHATS-APP COMMENTS RECEIVED FROM Mr. MANIVANNAN SIR, 9750571234 ON 08.06.2021

    ஏமாறுபவர் இருக்கும் வரை இந்த உலகம் யாரையும் ஏமாற்ற தயங்காதென்ற நல்ல பாடத்தை எல்லோரும் விளங்கிக்கொள்ளும்படிநடத்தியுள்ளீர்கள். இப்பாடத்தின் நீதிபோதனையாக அமுக்கிய தேங்காய் அழுகியது , முத்தாய்ப்பு. எல்லாவற்றையும் ஒருவன் பார்த்துக்கொண்டிருக்கின்றான் எங்கே,எப்படி என்பது மட்டும் எவர்க்கும் எப்போதும் தெரியாது.இதுநாள் வரை பிள்ளையார்க்கு உடைக்கும் தேங்காய் சிதறி விழுவதால் சிதற்தேங்காய் என நினைத்திருந்தேன்.நன்றி.

    -=-=-=-=-

    THANKS A LOT FOR YOUR KIND READING & ALSO FOR OFFERING THIS VERY VALUABLE COMMENTS. - VGK 

    பதிலளிநீக்கு